கோழி இறைச்சி உணவை திருடிய பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை!
அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகேயுள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரிந்த 66 வயது வெரா லிடெல் எனும் பெண் மீது S$1.98 மில்லியன் மதிப்புள்ள கோழி இறைச்சி உணவுப் பொட்டலங்களை திருடியதற்காக , நீதிமன்றம் 9 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த பெண் சிகாகோ நகருக்கு அருகேயுள்ள ஹார்வே பள்ளி மாவட்ட உணவுச் சேவைப் பிரிவுக்கு இயக்குநராகப் பணிபுரிந்து வந்நிலையில் 2020 ஜூலை மாதத்திற்கும் 2022 பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏராளமான கோழி உணவு மோசடியில் ஈடுபட்டதாக குறம் சுமத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக தருவிக்கப்பட்ட உணவு
கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட, கொவிட்-19 பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 11,000 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட சமைத்த கோழி உணவுகளை பெண் தருவித்துள்ளார்.
அவற்றைப் பள்ளிகளுக்கு உணவுச் சேவை விநியோகிக்கும் வாகனத்தின் மூலம் பெற்று மாபெரும் மோசடியில் ஈடுபட்டார்.
2020ஆம் ஆண்டு முதல் நடந்துவந்த இந்த மோசடிச் சம்பவம், 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பள்ளியின் நிதி நிலவரம் குறித்து கணக்காய்வில் வெளிச்சத்திற்கு வந்தது.
அதேவேளை கொரோனா பரவல் காலத்தில் வீடுகளில் இருந்து இணையம் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்காக உணவு தருவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனினும் , அவ்வாறு தருவிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் ஒன்றுகூட பள்ளிப் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரவில்லை என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.
ஆகஸ்ட் 9ஆம் திகதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், லிடெல் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார். ஆனால், அவரால் தருவிக்கப்பட்ட அந்தக் கோழி உணவுகள் யாருக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
அதேவேளை லிடெல் எனும் அந்த பெண்மணி , அந்தப் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.