தனது குடும்பத்தை காப்பாற்ற 4 கி.மீ தூரம் நீந்தி வந்த 13 வயது சிறுவன்
அஸ்திரேலியாவில் , 13 வயது சிறுவன் ஒருவன் சீற்றமான அலைகளுக்கு மத்தியில் 4 கி.மீ தூரம் நீந்தி வந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடாவில் ஒரு தாய் தனது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் 'பேடில்போர்டிங்' செய்துகொண்டிருந்தார்.

தத்தளித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மற்ற இரு குழந்தைகள்
அப்போது வீசிய பலத்த காற்றினால் அவர்களின் மிதவைகள் கரையை விட்டு வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டன. குடும்பம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த 13 வயது மூத்த மகன், உதவி கோருவதற்காகக் கரையை நோக்கித் தனது 'கயாக்' படகில் துடுப்பு வலித்துச் செல்ல முயன்றான்.
ஆனால், படகிற்குள் நீர் புகுந்ததால், அவன் படகைக் கைவிட்டுவிட்டுக் கடலில் நீந்தத் தொடங்கினான். சுமார் 4 கி.மீ (2 கடல் மைல்) தூரத்தை அவன் நீந்திக் கடந்தான்.
முதலில் இரண்டு மணிநேரம் உயிர்காப்பு அங்கி அணிந்து நீந்திய சிறுவன், அது தனது வேகத்தைத் தடுப்பதாக உணர்ந்து, அதைக் கழற்றிவிட்டு அடுத்த இரண்டு மணிநேரம் அங்கி இல்லாமலேயே நீந்திக் கரையை அடைந்தான்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கரையை அடைந்த சிறுவன், அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தான். உடனடியாக உலங்கு வானூர்தி மற்றும் மீட்புப் படகுகள் மூலம் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
இரவு 8:30 மணியளவில், கடற்கரையிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் நடுக்கடலில் ஒரு பேடில்போர்டைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மற்ற இரு குழந்தைகளையும் மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் மீட்புப்படைத் தளபதி பால் பிரெஸ்லாண்ட், அச்சிறுவனின் முயற்சியை "மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது" என்று பாராட்டியுள்ளார். சிறுவனின் உறுதியும் துணிச்சலும் இல்லையென்றால், இன்று அந்தத் தாயும் குழந்தைகளும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்" என்று காவல்துறை ஆய்வாளர் ஜேம்ஸ் பிராட்லி தெரிவித்துள்ளார்.