ஜப்பானில் சோக சம்பவம்: நீர்வீழ்ச்சி பள்ளத்தில் விழுந்து கனடியர் பலி
ஜப்பானில் நிகழ்ந்த துயரமான விபத்தில், ஒரு கனடிய பிரஜை உயிரிழந்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், வெளிநாடுகளில் பயணம் செய்யும் கனடியர்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் 39 வயதான ஆஷ்லி கே பெர்னிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவர் ஜப்பானிலுள்ள ஒரு ஸ்கி ரிசோர்ட்டில், நிர்ணயிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி ஸ்னோபோர்டிங் செய்தபோது, அருகிலிருந்த நீர்வீழ்ச்சி பள்ளத்தில் விழுந்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பெயரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், “ஜப்பானில் கனடிய குடிமகன் ஒருவர் உயிரிழந்ததை எங்களுக்குத் தெரியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவரின் குடும்பத்தாருக்கு தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருகிறோம். மேலும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடா அரசு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நெருங்கியவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் சாகச விளையாட்டுகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதைக் குறிப்பிடும் வகையில், இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.