சமூக வலைத்தளத்தை கலக்கும் விசித்திரமான காதல் கதை
சீனாவில் ஒரே பெயரைக் கொண்ட ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் யிவு நகரத்தைச் சேர்ந்த 33 வயதான மணமகனும், 28 வயதான மணமகளும் இருவருமே ‘ஜூ சியாசோங்’ என்ற ஒரே பெயரைக் கொண்டுள்ளனர்.
அவர்களது பெயர்கள் சீன மொழியிலும் ஒரே மாதிரியான எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.

மேலும், இருவரும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வருகின்றனர். மணமகள் விமானப் பணிப்பெண்ணாகவும், மணமகன் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமொன்றில் இந்த ஜோடியின் முதல் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அப்போது நேர்காணல் நடத்தியவர் ‘ஜூ சியாசோங்’ என அழைத்தபோது, இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றுள்ளனர்.
இந்தச் சம்பவமே அவர்களது அறிமுகத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
நீண்டகாலக் காதலுக்குப் பின்னர், 2026ஆம் ஆண்டு மே மாதம் தங்களது திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர்.
தொடர்ந்து, கடந்த 6ஆம் திகதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிகழ்வையும் விமரிசையாக நடத்தியுள்ளனர்.
இவர்களது திருமண அழைப்பிதழைப் பார்த்த உறவினர்கள் சிலர், அச்சிடும்போது மணமகனின் பெயரையே மணமகளுக்கும் தவறுதலாகப் பயன்படுத்திவிட்டதாக முதலில் நினைத்துள்ளனர்.
பின்னரே இருவருக்கும் உண்மையிலேயே ஒரே பெயர் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, திருமணப் பதிவு மற்றும் சொத்து ஆவணங்களை கணினி முறைமையில் உள்ளீடு செய்யும்போதும் ஒரே பெயர் காரணமாகப் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அதிகாரிகள் குறித்த ஆவணங்களை கைமுறையாகத் திருத்தியுள்ளனர்.
இந்த அரிய தற்செயல் நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பலரும் ‘உண்மையான விதி’ என வர்ணித்து வருகின்றனர்.