உலகக் கிண்ணக் காற்பந்துப் பயிற்சியின்போது வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!
2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் கத்தார் வெளிநாட்டு ஊழியர்களை மோசமாக நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ஊழியர் ஒருவரது மரணம் கத்தாருக்கு எதிரான விமர்சனங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் தொடங்கிய பிறகு பயிற்சி நடைபெற்ற இடத்தில் அந்த ஊழியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த மரணச் சம்பவத்தை Reuters செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்திய 2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தலைமை நிர்வாகி நாசிர் அல் காதெர் (Nasser Al Khater) மேலதிகத் தகவல்களை வழங்கவில்லை.
சம்பந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்துக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து கத்தார் வேலைப் பாதுகாப்பு விசாரணையைத் தொடக்கியுள்ளது.
அதன்படி சவுதி அரேபியாவின் தேசியக் காற்பந்து அணி பயிற்சி மேற்கொண்ட கார் நிறுத்துமிடத்தில் விளக்குகளைப் பொருத்தும் பணியில் பிலிப்பீன்ஸ் ஊழியர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நிகழ்ந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். அந்த மரணச் சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதது உறுதியானால் சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனத்துக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கத்தார் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.