அயர்லாந்து ஜனாதிபதியாக கேத்ரின் கொன்னொல்லி பதவி ஏற்றார்
அயர்லாந்து குடியரசின் 10வது ஜனாதிபதியாக கேத்ரின் கொன்னொல்லி பதவியேற்றுள்ளார்.
அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற தேர்தலில், 68 வயதான கொன்னொல்லி பெரும் வாக்கு வித்தியாசத்துடன் Fine Gael கட்சியின் வேட்பாளர் ஹீதர் ஹம்ஃப்ரிஸை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
14 ஆண்டுகளாக பதவி வகித்த மைக்கேல் டி. ஹிகின்ஸின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று டப்ளின் கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் புதிய ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி முத்திரை
கொன்னொல்லி தன் கணவர் பிரையன் மெக்எனரியுடன் சேர்ந்து பீனிக்ஸ் பூங்காவில் உள்ள பார்ம்லேய் மாளிகையிலிருந்து டப்ளின் கோட்டைக்கு வாகன ஊர்வலமாக வந்தார்.
டப்ளின் கோட்டையின் செயிண்ட் பேட்ரிக்ஸ் மண்டபத்தில், அயர்லாந்தின் தலைமை நீதிபதியால் சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டது.
அதன்பின், அவருக்குப் ஜனாதிபதி முத்திரை வழங்கப்பட்டு, தனது பதவியேற்பு உரையை வழங்கினார்.
இந்த விழாவில் அயர்லாந்து பிரதமர் மிச்சேல் மார்டின், துணைப் பிரதமர் சைமன் ஹாரிஸ், மூத்த அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வட அயர்லாந்தின் முதலமைச்சர் மிசேல் ஓ’நீல் மற்றும் சின் பேயின் தலைவர் மேரி லூ மெக்டொனால்டும் நிகழ்வில் பங்கேற்றனர்.