இல் து பிரான்ஸ் போக்குவரத்து சபைக்கு 20 மில்லியன் யூரோ இழப்பு
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் இடம்பெற்ற வன்முறையின் காரணமாக அதன் போக்குவரத்து சபைக்கு ( Île-de-France Mobilités ) இதுவரை 20 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்தவாரம் Nahel எனும் இளைஞன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, காவல்துறையினருக்கு எதிராக நாடு முழுவதும் பலத்த வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.
பொதுப்போக்குவரத்து சொத்துக்கள் சேதம்
வன்முறை கலவரமானதில் பேருந்துகள், ட்ராம் தொடருந்துகள் மற்றும் மெற்றோக்கள் என பொதுப்போக்குவரத்து சொத்துக்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. கடந்த ஒருவாரமாக இடம்பெற்று வரும் வன்முறையில் இதுவரை மொத்தமாக 398 பேருந்துகள் எரியூட்டப்பட்டுள்ளன.
இவற்றில் Aubervilliers நகர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருந்துகள் ஒரே இரவில் எரியூட்டப்பட்டிருந்தன. பேருந்து ஒன்றின் சராசரி மதிப்பு 350,000 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் Clamart நகரில் வைத்து T6 ட்ராம் ஒன்றும், Chatenay-Malabry நகரில் வைத்து T10 ட்ராம் ஒன்றும் எரியூட்டப்பட்டிருந்தது. ட்ராம் ஒன்றின் மதிப்பு 5 மில்லியன் யூரோக்களாகும்.
அதன்படி மொத்தமாக இந்த ஒரு வாரத்தில் 20 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.