எயார் கனடா விமானப் பயணிகளுக்கான அறிவிப்பு
எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
எயார் கனடா விமானப் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்துள்ளனர்.
புதிய கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ள முடியாத காரணத்தினால் நிறுவனத்திற்கு 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கியது.
புதன்கிழமை அதிகாலையில் எயார் கனடா மற்றும் ஏர் கனடா ரூஜ் ஆகியவற்றுக்கு முதல் வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கியதாக கனேடிய பொது ஊழியர்கள் தொழிற்சங்கம் (CUPE), உறுதிப்படுத்தியது.
இதன்படி, விமானப் பணியாளர்கள் சனிக்கிழமை அதிகாலை 12:58 மணிக்கு (ET) வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டதாக எயார் கனடா தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கம், விமான நிறுவனத்தின் பிணைப்பு மத்தியஸ்த செயல்முறைக்கு செல்லும் முன்மொழிவை நிராகரித்ததாக கூறியுள்ளது.
வேலைநிறுத்தம் ஏற்பட்டால், ரத்து செய்யப்படக்கூடிய விமானங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், அவர்கள் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் ஏயார் கனடா தெரிவித்துள்ளது.