ரஷ்ய சுற்றுலாத் துறையில் ஒரு புதிய புரட்சி
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான பரஸ்பர சுற்றுலா போக்குவரத்துப் பரிமாற்றம் 2024ஆம் ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2024ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குப் பயணம் செய்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,20,000 ஐ கடந்துள்ளதாகவும், இது 2023ஆம் ஆண்டு 60,000 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பான வளர்ச்சியைக் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு சுமார் 1,60,000 ரஷ்யர்கள் இந்தியாவிற்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இது 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைத் தொடர்ந்தால் 2025ஆம் ஆண்டுக்குள் பரஸ்பர சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4,50,000 ஐ எட்டலாம் என மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவிற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் முக்கியமான 10 நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம் பிடித்துள்ளது. மேலும், ஈ-விசா செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கும் நோக்கத்துடன், விசா விதிமுறைகளை மேலும் தளர்த்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்தியா, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்காக எளிமைப்படுத்தப்பட்ட சுற்றுலா நடைமுறையை அறிமுகப்படுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்தியா-ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளின் விரிவாக்கம், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் பரஸ்பர சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.