சுவிஸில் கேக் ஆடையால் கின்னஸ் சாதனை படைத்த பெண்!
சுவிட்சர்லாந்தை சேர்ந்த நடாஷா என்பவர் திருமண ஆடை வடிவமைப்பில் அணிந்து கொள்ளும் வகையில் கேக் ஒன்றை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் நடாஷா கோலின் கிம். இவர் ஒரு கேக் தயாரிப்பாளர் ஆவார். நடாஷா ஸ்வீட்டி கேக்ஸ் என்ற பேக்கரியை நடத்தி வருகிறார். இவர் வித்தியாசமான முறையில் கேக் வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக நடாஷா, திருமண ஆடை வடிவில், அணியக் கூடிய வகையில் கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த கேக் சுமார் 131.15 கிலோ கிராம் எடையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த பிரமிக்க வைக்கும் கேக் கடந்த மாதம் 15ஆம் திகதியன்று சுவிட்சர்லாந்தின் பெர்னில் நடந்த சுவிஸ் உலக திருமண கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கண்காட்சிக்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. இந்த கேக் தற்போது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கின்னஸ் உலக சாதனையாளர்கள் நடாஷா வடிவமைத்த இந்த கேக் உடையின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ 68,000இற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.