இனி மேலாவது உதவுவார்களா? கனடாவிடம் கெஞ்சும் 14 வயது சிறுவன்
கனடாவில் குடியேற தமக்கும் குடும்பத்திற்கும் அனுமதியளிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்திற்கு இனியேனும் பதிலளிக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், 14 வயது சிறுவன், தமக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பான புகலிடத்தை ஏற்படுத்தித் தருமாறு கனேடிய அரசாங்கத்திடம் கெஞ்சிக் கடிதம் எழுதினான்.
அத்துடன் ஏழு பேர் கொண்ட குடும்பமும் கனடாவில் குடியேற விண்ணப்பம் செய்துள்ளது. இதனிடையே, 60 நாட்கள் விசா அனுமதிக்கப்பட்டு குறித்த குடும்பமானது ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டில் தற்போது வசித்து வருகிறது.
கனடா நிர்வாகம் தங்கள் கோரிக்கையை ஏற்கும் என்ற நம்பிக்கையில் அந்த குடும்பம் காத்திருப்பதாகவும், அந்த 60 நாட்களில் 30 நாட்கள் கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, குறித்த 14 வயது சிறுவன், கனடா நிர்வகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள மீண்டும் வலியுறுத்தியுள்ளான்.
ஆப்கான் நிர்வாகம் மக்களை கைது செய்வதும், கொலை செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளது. அவ்வாறான ஒரு சூழலில் வாழ தம்மை அனுமதிக்க வேண்டாம் எனவும் சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.