AI தொழில்நுட்பத்தின் அதிரடி மாற்றம் ; 5% பணியாளர்களை பணிநீக்கம் அமெரிக்க எக்ஸ்பிரஸ்
பிரபல சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான அமெரிக்க எக்ஸ்பிரஸ் (American Express), தனது உலகளாவிய பணியாளர்களில் 5 சதவீதத்தினரை (சுமார் 3,800 பணியாளர்கள்) பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் கட்டணத் துறைக்கான (Payment Industry) நடவடிக்கைகளை மாற்றியமைக்கும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் ஸ்குவெரி (Stephen Squeri) கூறுகையில், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது அமெரிக்க எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை மேலும் சுறுசுறுப்பான மற்றும் திறமையான அமைப்பாக மாற்றும் என்றும், வணிக முன்னுரிமைகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் செயல்முறைகளைத் தானியங்கிகளாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்களைத் தழுவ வேண்டியது அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.