கனடா ராணுவ முகாம் தீ விபத்து: போலி நிதியுதவிப் பக்கங்கள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் உள்ள ‘சி.எஃப்.பி வெய்ன்ரைட்’ ராணுவப் முகாமில் அண்மையில் ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவுகள் குவிந்து வரும் நிலையில், இந்தத் துயரத்தைப் பயன்படுத்தி போலியாக நிதி திரட்டும் மோசடிகளும் அதிகரித்துள்ளன.
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்த 23 வயதான ராணுவ வீரர் ஷான் ஃபாரல் என்பவரின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி ‘spotfund.com’ தளத்தில் போலி நிதியுதவிப் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எச்சரித்துள்ள அவரது தாய் பட்ரீசியா ஃபாரல், குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு நிதி திரட்டும் பிரச்சாரத்திற்கும் பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

"ஒரு துயரச் சம்பவத்தையும் மக்களின் உதவியாளும் எண்ணத்தையும் சிலர் தவறாகப் பயன்படுத்துவது மனவேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் நற்குணத்தை யாரையும் சுரண்ட விடாதீர்கள்" என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற துயரச் சம்பவங்களின் போது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களை நிதானமாக யோசிக்க விடாமல் தடுப்பதே மோசடிக்காரர்களின் முக்கிய நோக்கம் என்று ரெஜினா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரையன் மெக்கூயின் சுட்டிக்காட்டியுள்ளார்.
விபத்து குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாவதற்கு முன்பே, சமூக வலைதளங்களில் (குறிப்பாக X தளத்தில்) குண்டுவெடிப்பு மற்றும் அரசின் மறைப்பு வேலைகள் போன்ற தவறான தகவல்களும் வதந்திகளும் பரப்பப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.
ஃபாரல் குடும்பத்தினரின் தகவல்படி, அவர்களின் குடும்ப நண்பரான ஹெலோயிஸ் வெர்முலன் என்பவரால் ‘GoFundMe’ தளத்தில் தொடங்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே அதிகாரப்பூர்வமான உண்மையான நிதியுதவிப் பக்கமாகும்.
பொதுமக்கள் எந்தவொரு தகவலையோ அல்லது நிதியுதவிப் பக்கங்களையோ பகிர்வதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை இருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.