சீனாவிற்கு மீண்டும் சேவைகளை தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவிப்பு
ஆறு ஆண்டுகளின் பின்னர் சீனாவிற்கு தனது சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 1 முதல் டெல்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் இடையே நேரடி விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி , மற்றும் சீன அதிபர் பேச்சுவார்த்தை
அதன்படி சீனாவுக்கு வாரத்திற்கு நான்கு முறை போயிங் 787-8 விமானங்கள் இயக்கப்படும். 2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க தொடங்கியது. முன்னதாக கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது. எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி , மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.