கனடாவில் விமான பயணிகளின் கவனத்திற்கு
கனடாவில் விடுமுறை சுற்றுலா பருவகாலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விமானிகள் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்ததை அடுத்து ஏர் டிரான்சாட் நிறுவனம் பல விமானங்களை ரத்து செய்துள்ளது.
மொண்ட்ரியாலில் அமைந்துள்ள டிரான்சாட் A.T. நிறுவனம் செவ்வாய்க்கிழமை இதுவரை குறைந்தது ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
டொரொண்டோ –மெக்சிகோ, டொரொண்டோ – டொமினிகன் குடியரசு, மற்றும் மொண்ட்ரியல் – டொமினிகன் குடியரசு வழித்தடங்களில் பயணம் செய்ய இருந்தவையாகும்.

பேச்சுவார்த்தைகள்
இதற்கு முன் திங்கள்கிழமை, கேன்குன், டொமினிகன் குடியரசு மற்றும் கியூபாவில் விடுமுறையில் இருந்த பயணிகளை முன்கூட்டியே திருப்பி அனுப்ப ஏர் டிரான்சாட் கூடுதலாக நான்கு விமானங்களை ஏற்பாடு செய்தது.
நிறுவனத்தின் 750 விமானிகளுக்கான புதிய ஒப்பந்தம் தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்தன.
விமானிகள் உயர்ந்த ஊதியம், பணியின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை கோருகின்றனர்.
“செயல்பாடுகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க இன்று உடன்பாட்டை எட்டுவதற்காக இடைவிடாமல் உழைக்கிறோம்” என்று டிரான்சாட் நிறுவன பேச்சாளர் ஆண்ட்ரியன் காக்னே கூறியுள்ளார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் கரிபியன் தீவுகள், மெக்சிகோ, ஐரோப்பா உள்ளிட்ட பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான கனடியர்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படலாம்.