விமான நிலைய பேருந்தை கடத்தி 17 மைல்கள் பொலிசாரை ஓடவிட்ட நபர்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கான பேருந்தை நபர் ஒருவர் கடத்தி சென்றதுடன், பொலிசார் 17 மைல்கள் ஓடவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தையே 43 வயதான அந்த நபர் கடத்தியுள்ளார்.
புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து, அந்த விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், பொலிசார் குறித்த நபரை தங்கள் வாகனங்களில் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் Cadman Plaza West அருகே பொலிசார் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்படும் நிலையில், அந்த நபர் பொலிசாரிடம் என்னை சிறைக்கு அனுப்புவீர்களா என விசாரித்துள்ளார். புரூக்ளின் பகுதியை சேர்ந்த அந்த நபர் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ல் கொள்ளை சம்பவம் தொடர்பில் அந்த நபர் கைதாகியுள்ளதும் 10 வழக்குகளில் தேடபப்ட்டு வந்ததும் பொலிஸ் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.