நள்ளிரவில் மருத்துவமனையின் மீது வான்வழித் தாக்குதல் ; 34 பேர் பலி
மியான்மர் நாட்டில், நள்ளிரவில் மருத்துவமனையின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில், ராணுவ அரசுக்கு எதிராக அராக்கன் ஆயுதக்குழு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றது.

போர் விமானங்கள்
இதையடுத்து, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைந்திருந்த பொது மருத்துவமனையின், ராணுவப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையின் மீது போர் விமானங்கள் மூலம் 2 குண்டுகள் வீசப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில், 17 பெண்கள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டதாகவும், 80 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் மருத்துவமனையின் கட்டடம் சேதமடைந்துள்ளது குறித்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தத் தாக்குதல் பற்றி, மியான்மரின் ராணுவ அரசு எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடவில்லை.
முன்னதாக, மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் படைகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.