மியான்மரில் திருமண வீட்டின் மீது வான்வழி தாக்குதல் ; 17 பேர் உயிரிழப்பு
மியான்மரில் திருமண நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் மீது ராணுவ விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மரின் ஷான் மற்றும் கரென்னி மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோபே (Moe Bye) கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களான மணமக்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென ராணுவ விமானம் மூலம் குறித்த வீட்டின் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஏற்பட்ட பயங்கர வெடிச்சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விமானத்தின் சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது பலர் உயிரிழந்து கிடந்ததாகவும் நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக நேரில் பார்த்த சாட்சி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், உள்ளூர் மக்களால் பகிரப்பட்ட புகைப்படங்களில் ஆறு பேரின் சடலங்கள் காணப்படுவதாகவும், உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.