உக்ரைனில் வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 21 பேருக்கு நேர்ந்த கதி
உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சுமி நகரை முற்றுகையிட்டு நடந்த வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 13வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இதன்படி ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இதுவரை 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், சுமி நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மீட்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று பதில் கூறும்போது, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நேற்றிரவு நான் பேசினேன்.
694 இந்திய மாணவர்களும் தொடர்ந்து சுமி நகரிலேயே சிக்கி தவித்து வருகின்றனர் என தெரிய வந்தது. இன்று அவர்கள் அனைவரும் போல்டவா நகருக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும் உக்ரைனின் சுமி நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. எனினும், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சுமி நகரை முற்றுகையிட்டு நடந்த வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
ரஷிய படையெடுப்பினால், நகரங்களுக்குள் சிக்கியுள்ள மக்கள் உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.