டிரம்பின் 50% வரி விதிப்பு அச்சுறுத்தல்: ஆல்பர்ட்டா பிரதமரின் அறிவிப்பு!
கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் தடை விதிக்கப் போவதில்லை என ஆல்பர்ட்டா மாகாணப் பிரதமர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது கடைகளில் அமெரிக்கப் பொருட்களை விற்பனைக்கு வைப்பது மற்றும் நுகர்வது குறித்த முடிவை சில்லறை வியாபாரிகளிடமும், நுகர்வோரிடமுமே விட்டுவிடுவதாகக் கூறியுள்ளார்.

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் செல்லும் எந்தவொரு பொருளுக்கும் அமெரிக்கா தடை விதிக்கவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எனவே பதிலுக்கு நாம் தடை விதிப்பது என்பது சற்று தீவிரமான நடவடிக்கையாகிவிடும் எனவும் நாம் இதைக் நிதானமாகவும் அமைதியாகவும் கையாள வேண்டும் எனவும் உணர்ச்சிவசப்படாமல், துறை சார்ந்த சிக்கல்களை ஒவ்வொன்றாக அணுகித் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் கருத்துகளுக்குப் பதிலடியாக, கனடாவின் பல மாகாண மதுபானக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அமெரிக்க மதுபானங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தன.