ஈரான் மோதலுக்கு பெரும் விலை கொடுக்கும் அமெரிக்கா ; வெளியான அதிர்ச்சி தகவல்
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 3,750 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.12.58317 மில்லியன்) செலவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத் தேவைகள் மற்றும் வெள்ளை மாளிகையின் செலவுகளுக்காக 9,500 கோடி டொலர் மதிப்பிலான அவசரகால நிதி ஒதுக்கீட்டு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் தயாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன் ஆஜரான பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், குறித்த நிதி ஒதுக்கீட்டின் அவசியம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர், இந்த அவசரகால நிதி ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால், அமெரிக்க இராணுவம் கடுமையான நிதி நெருக்கடியையும் செயல்திறன் பாதிப்பையும் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
எனினும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் பேட்டி முர்ரே, ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில், தற்போது மேலும் 7,000 கோடி டொலர் நிதி கோருவது நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 11ஆவது நாளாகவும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் விமானப்படைத் தளங்கள் மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் இலக்குகளாகக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 நாட்களில் அமெரிக்காவின் தாக்குதல்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதற்கு பதிலடியாக ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அமெரிக்காவுக்கு தற்போது ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ள டிரம்ப், நடான்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் நிலத்தடியில் அமைக்கப்பட்டு வரும் ‘பிக்ஏக்ஸ் மவுண்டன்’ எனப்படும் புதிய அணுச்செறிவூட்டல் மையம் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த நிலைப்பாடு, அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்துவதுடன், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதேவேளை, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் மேற்கொண்ட அமைதி முயற்சிகளிலும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.