உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் ; ஈராக்கில் கைதான அமெரிக்க ஊடகவியலாளர் விடுவிப்பு
ஈராக்கின் பக்தாத் நகரில் ஈரான் ஆதரவு பெற்ற 'கதாயிப் ஹிஸ்புல்லா' ஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன், ஈராக் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குறித்த ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை விடுவிப்பதற்குப் பதிலாக, ஷெல்லி கிட்டில்சனை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளதாக அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த காலக்கெடு முடிவடைய சில மணிநேரங்களே இருந்த நிலையில் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது.
இது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கை என்றும், அமெரிக்காவுடனான தங்களது போர் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஷெல்லி கிட்டில்சன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல அமெரிக்க ஊடகங்களுக்காகப் பணியாற்றி வரும் ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஆவார்.