கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ள 11 வயதுச் சிறுவன்!
கனடாவில் எட்மண்டன் நகரில் கியாஸ் நிலையம் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் உப்பல் (வயது 41) மற்றும் அவருடைய 11 வயது மகன் மரணம் அடைந்தனர்.
இது கும்பல் தாக்குதலாக இருக்க கூடும் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி எட்மண்டன் நகரின் காவல் துறையை சேர்ந்த சூப்பிரெண்டு பதவிவகிக்கும் கோலின் டெர்க்சென் கூறும்போது, இந்த தாக்குதலின்போது, சிறுவனின் நண்பன் காரில் இருந்துள்ளான்.
ஆனால், எந்தவித காயமுமின்றி அவன் தப்பி விட்டான். துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு காரில் சிறுவர்கள் இருக்கின்றனர் என்ற விவரம் தெரியுமோ, தெரியாதோ என எங்களுக்கு தெரியவில்லை.
ஆனால் வருத்தத்திற்கு உரிய விசயம் என்னவெனில், உப்பலை பின்தொடர்ந்தவர்கள், காரில் அவருடைய மகன் இருக்கிறான் என தெரிந்ததும் உள்நோக்கத்துடன் துப்பாக்கி சூடு நடத்தி அவனை கொன்று விட்டனர் என நமக்கு தெரிய வருகிறது என கூறியுள்ளார்.
உப்பலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கொக்கைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்தல், கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் இதுபற்றிய விசாரணை தொடங்க இருந்தது. 2021-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து தொடர்புடைய வழக்கு ஒன்றில், அங்கீகரிக்கப்படாத வகையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருக்கிறார் என்றும், ஆயுதம் கொண்டு தாக்கினார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
இரு கும்பல்களுக்கு இடையேயான மோதலில் உப்பல் கொல்லப்பட்டு இருக்க கூடும் என போலீசார் தரப்பில் நம்பப்படுகிறது. எனினும், இதுபற்றி விசாரணைக்கு பின்னரே தெரிய
வரும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.