அமெரிக்க சுங்க வரிகளால் கனடா பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்
கனடாவின் பொருளாதாரம், இரண்டாம் காலாண்டில் 1.6% வீழ்ச்சியடைந்ததாக கனடா புள்ளிவிபரத் துறை (StatCan) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய சுங்க வரிகள் காரணமாக ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் கடுமையாக குறைந்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலாம் காலாண்டில் 2% வளர்ச்சி பதிவான நிலையில், இரண்டாம் காலாண்டில் அதிரடியாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கார், எஃகு, அலுமினியம் ஏற்றுமதிகள் 25% வரை சரிந்துள்ளன. தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் உபகரண ஏற்றுமதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மூலதன முதலீடுகள் 9.4% குறைந்துள்ளன; இது 2016க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி எனக் கூறப்படுகிறது. கனடாவின் எதிர் சுங்க வரி நடவடிக்கைகள் காரணமாக இறக்குமதியும் சரிந்துள்ளது.
டிரம்ப் விதித்த சுங்க வரிகள் கனடா வளர்ச்சியை மட்டுப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள், எச்சரித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 17ஆம் திகதி வட்டி விகித முடிவை எடுக்கும் கனடா மத்திய வங்கி, இந்த புள்ளிவிபரங்களை கவனமாக ஆய்வு செய்யவுள்ளது.