டியாகோ கார்சியாவில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப்பயிற்சி
இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவுக்கு அருகில் அமெரிக்காவும் இ்ந்தியாவும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
இப்போர்ப்பயிற்சியில் அமெரிக்க, இந்திய கடற்படைகள் பங்குபற்றியதாக அமெரிக்க கடற்படையின் ஏழாவது படைப்பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த இக்கூட்டுப் பயிற்சியின் ஊடாக நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்கள் மற்றும் கடல்சார் கள பயிற்சிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இப்பயிற்சியின் ஊடாக இந்தோ-பசுபிக் பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் கூட்டுத் திறன்கள் வலுவடைந்துள்ளது என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாட்டு படையினரும் கடலில் அதிநவீன தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான பயிற்சிகளுக்குரிய செயல்பாட்டுத் திட்டமிடலில் இணைந்து செயற்பட்டனர்.
யுத்த விமானங்களும் இருதரப்பு நீர்மூழ்கி கப்பல்களும் தகவல் தொடர்பு பயிற்சிகளுடன் ஒருங்கிணைந்தபடி இப்பயிற்சியை மேற்கொண்டதாக பாதுகாப்பு சேவைகள் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையில் மிகப்பெரிய பிரிவாக விளங்கும் ஏழாவது படைப்பிரிவினருடன் இணைந்தபடி இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.