அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்க்கும் கனடா
அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வ கருத்து வெளியிட்டுள்ளது.
டென்மார்க்கின் தன்னாட்சி கொண்ட பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்கா இணைத்துக்கொள்ள விரும்புவதாக வாஷிங்டன் மீண்டும் கூறியுள்ள நிலையில், கனடாவின் வெளிநாட்டு விவகார அமைச்சர் அனிதா ஆனந்த், கிரீன்லாந்தின் இறையாண்மையை உறுதிப்படுத்தி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
டென்மார்க் வெளிநாட்டு அமைச்சர் லார்ஸ் லொக்கே ரச்முசென் உடன் தொலைபேசி மூலம் பேசிய ஆனந்த், “இறையாண்மை மற்றும் நிலப் பகுதிகளின் ஒருமைப்பாட்டை மதிப்பது அடிப்படையாகும் என்பதில் கனடாவின் முழு ஆதரவை” அவரிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்துக்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்துக்கான தூதராக லூசியானா மாநில ஆளுநர் ஜெஃப் லாண்ட்ரியை நியமித்ததன் பின்னணியில் வெளியாகியுள்ளன.
அந்த நியமனத்தின் நோக்கம் “கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றுவது” என லாண்ட்ரி கூறியிருந்தார்.
ஆனால், அதே நாளில் பின்னர் பேசிய லாண்ட்ரி, அமெரிக்கா “எந்த நாட்டையும் ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், கிரீன்லாந்தின் நூக் (Nuuk) நகரில் கனடா தூதரக அலுவலகம் (Consulate) திறக்க ஆனந்த் திட்டமிட்டுள்ளதாகவும், ஆர்க்டிக் கவுன்சில் மற்றும் நேட்டோ (NATO) பாதுகாப்பு கூட்டமைப்பின் வழியாக டென்மார்க், கனடாவின் முக்கிய கூட்டாளி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.