கனடாவில் இந்திய நடிகர் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு
காமெடி நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான கனடாவில் உள்ள கப்ஸ் கேப் என்ற உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக நடந்த துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கபில் சர்மா. நகைச்சுவை நடிகர், டிவி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார்.
மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு
இவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக கப்ஸ் கேப் என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணகவம் மீது கடந்த ஜூலை9 ம் திகதி மர்ம நபர் 9 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட இந்த உணவகம், மீண்டும் கடந்த மாதம் 20ம் திகதி திறக்கப்பட்டது. பொலிஸார் இங்கு வந்து உணவருந்திவிட்டு சென்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஒரு மாதமே ஆன நிலையில், இன்று மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல் வருகிறது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை உறுதி செய்த பொலிஸார், கண்ணாடி, ஜன்னல் சேதம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.