பெண்கள் தொடர்பில் தாலிபானின் மற்றுமொரு மோசமான தடை
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளமை உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிராக பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதற்கு சர்வதேச அளவில் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
679 பெண் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாக கூறி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து பெண் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, பெண்ணுரிமை, பாலின ஆய்வுகள் போன்ற தலைப்புகளில் ஆப்கன் பெண்களால் எழுதப்பட்ட 140 புத்தகங்கள், மற்றும் ஈரானிய எழுத்தாளர்கள் எழுதிய 310 புத்தகங்கள் உட்பட மொத்தம் 679 பெண் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாலிபான்களின் இந்த நடவடிக்கை, ஆப்கானிஸ்தானில் கல்வி மற்றும் பெண் உரிமைகள் மேலும் பின்னோக்கி செல்வதை காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.