கனடாவின் இந்தப் பகுதிகளில் உறைபனி தொடர்பில் எச்சரிக்கை
கனடாவின் கிழக்கு பிராந்தியத்தில் உறைபனி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் துறை இந்த எச்சரிக்யை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கியூபெக் மற்றும் நியூபிரன்ஸ்விக் மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு மாகாணங்களும் குளிரான வானிலை காரணமாக பனியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அதிகமான உறைபனி எச்சரிக்கைகள் கியூபெக்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொன்ரியாலுக்கு வெளியேயுள்ள வால்-டே-மொன்ட்ஸ், சைன்ட்-அன்ன்-டு-லாக், சைன்ட்-அடேல், வடக்கிலுள்ள வால்-டோர் மற்றும் தெற்கிலுள்ள கிரான்பி, ஷெர்ப்ரூக், சைன்ட்-ஜஸ்டின் போன்ற பகுதிகளுக்கும் உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூபிரன்ஸ்விக்கில், ஃபிரெடெரிக்டனுக்கு மேலுள்ள பகுதிகள் – கேம்பெல்டன், ரெட்டிகூஷ் கவுண்டியின் கிழக்கு, எட்மன்ஸ்டன் மற்றும் மதவாஸ்கா கவுண்டி, மவுண்ட் கார்ல்டன்-ரெனஸ் நெடுஞ்சாலை, வுட்ஸ்டாக் மற்றும் கார்ல்டன் கவுண்டி ஆகிய பகுதிகளும் உறைபனியால் பாதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கியூபெக்கில் சில பகுதிகளில் இன்றிரவு மற்றும் சனிக்கிழமை இரவு வெப்பநிலை உறைபனி நிலை அல்லது அதற்கும் கீழே குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூபிரன்ஸ்விக்கில் வெப்பநிலை மறை1 பாகை செல்சியஸ் முதல் 4 பாகை செல்சியஸ் வரை குறையக்கூடும், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உறைபனி உருவாகும் அபாயம் அதிகம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.