செவ்வாயில் வேற்றுகிரகவாசிகள் வாழ்கின்றனரா... நாசா புகைப்படம் கூறுவது என்ன?
செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கடந்த ஜூலை மாதம் செவ்வாய் கோளின் மவுண்ட் ஷார்ப் பகுதியைச் சேர்ந்த பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இந்தப் புகைப்படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பெரிய படத்தில், பாறைப் பகுதியில் கதவு போன்ற தோற்றமுடைய அமைப்பு ஒன்று தென்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகளின் நாகரிகம் இருந்திருக்கலாம் அல்லது இன்னும் இருக்கலாம் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
கியூரியாசிட்டி ரோவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கோளின் கேல் பள்ளத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சுமார் 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை ஆய்வு செய்து வருகிறது.
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கோளில் நுண்ணுயிர்கள் வாழ்ந்தனவா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு குறித்து பறக்கும் தட்டு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் ஸ்காட் வேரிங், அது உண்மையில் ஒரு கதவு போன்றே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அமைப்பு சுமார் 6.6 அடி உயரமும் 3.3 அடி அகலமும் கொண்டதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த அளவீடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இதனிடையே, இந்தக் காட்சி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்ற போதிலும், செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான அல்லது பழமையான நாகரிகம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
மேலும், செவ்வாயில் உயிரினங்கள் அல்லது பண்டைய நாகரிகம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு உண்மையில் என்ன என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், அதனை வேற்றுகிரகவாசிகளின் இருப்புக்கான ஆதாரமாகக் கருத முடியாது என விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டப்படுகிறது.