பிரான்ஸில் மாபெரும் ஆயுதக் கொள்ளைக் கும்பல் கைது ; 54 கிலோ தங்கம் மீட்பு
பிரான்ஸின் டொப் (Doubs) பிராந்தியத்திலுள்ள பெசாஞ்சொன் (Besançon) நகரில், ஆடம்பர நகை உற்பத்தி நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு ஆயுதக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுமார் 6 மில்லியன் யூரோக்களுக்கு மேல் பெறுமதியான 54 கிலோகிராம் தங்கம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தேசிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) எட்டு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு முறைப்படி குற்றஞ்சாட்டப்பட்டனர்.

திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான தேசிய வழக்குரைஞர் அலுவலகத்தின் (PNACO) தலைவரான வனேசா பெரே (Vanessa Perrée) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் 54 கிலோகிராம் தங்கமும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 6 மில்லியன் யூரோக்களுக்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர்களைக் கைது செய்தபோது இராணுவப் பயன்பாட்டுக்குரிய தளவாடங்கள், கனரக ஆயுதங்கள், ராக்கெட் ஏவுகணை மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 26 முதல் 57 வயதுக்கு இடைப்பட்ட ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். இவர்களில் ஏழு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எட்டாவது சந்தேக நபர் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கைக்கு மாறாக, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சில நாட்களில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதமேந்திய கூட்டுக் கொள்ளை, கூட்டாகக் கொலை முயற்சியில் ஈடுபட்டமை, போர் ஆயுதங்களை வைத்திருந்தமை, கடத்தல், சட்டவிரோதமாகச் சிறைபிடித்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குச் சதி செய்தமை உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சந்தேக நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களின் முதலாவது சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
ஆடம்பர நகைகள் தயாரிப்பதற்குத் தேவையான விலைமதிப்பற்ற உலோகங்களை உருக்கும் தொழிற்சாலை ஒன்றுக்குள் கலாஷ்னிகோவ் ரகத் துப்பாக்கிகளுடன் நுழைந்த கொள்ளையர்கள், பல கிலோகிராம் தங்கத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது காவல்துறையினரை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த செவ்வாய்க்கிழமை காலை அதே பிராந்தியத்திற்கு அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தைக் குறிவைத்து இரண்டாவது ஆயுதக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல கிலோகிராம் தங்கம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையிடப்பட்ட தங்கம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.