உணவு பொருட்களை ஏற்றிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
ஈகுவேடார் நாட்டின் பாஸ்தஜா மாகாணத்தின் டிவினோ மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களுக்கு வேண்டிய உணவு பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவினோ மாவட்டத்தில் வெள்ளம் எதிரொலியாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்து, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்குவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில், வீரர்கள் 5 பேர் மற்றும் பொதுமக்களில் 3 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து தொடர்பில், ஈகுவேடார் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,
இந்த சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரிக்க விபத்து விசாரணை குழு ஒன்று உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.