flydubai இந்திய விமானிக்கு டிரம்ப் பாராட்டு!
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற flydubai விமானத்தில், சக உதவி விமானியால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த போதிலும், 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளனர்.
விமானத்தின் நடுவானில் உதவி விமானி, கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை கீழே வீழ்த்த முயன்றதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த நிலையிலும் மனஉறுதியுடன் போராடிய கேப்டன் ஸ்மித், காக்பிட் கதவை திறந்து கொடுத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே நுழைய வழிவகுத்தார்.
இதனால் இஸ்ரேலிய பயணி யானிவ் ஹாயூன் உட்பட பலர் உள்ளே சென்று அந்த தாக்குதல் நடத்தியவரை மடக்கி பிடித்தனர்.
இந்த சம்பவத்தைக் குறித்து ஊடகங்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தாக்குதல் நடத்திய உதவி விமானி ஒரு தீவிரவாதியாகவோ அல்லது மனநல பாதிக்கப்பட்டவராகவோ இருக்கலாம் என குறிப்பிட்டார்.
மேலும், கடுமையான காயங்களுடன் காக்பிட் கதவை திறந்து பேரழிவை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் ஒரு உண்மையான "ஹீரோ" என்றும், அவருக்கு உதவிய பயணிகளின் தைரியம் அபாரமானது என்றும் புகழாரம் சூட்டினார்.
விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. 174 பேரை காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரின் இந்த வீர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.