அமெரிக்க குடியேற்றவாசிகளிற்கு சிக்கல்; இந்த வாரம் முழுவதும் கைதுகள் இடம்பெறலாம்!
அமெரிக்க ஜனாதிபதியாக இன்று (20) டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், சிக்காக்கோவில் குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பிப்பார் என பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள் பல ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
சமஸ்டி அதிகாரிகள் சுமார் 300 குடியேற்றவாசிகளை இலக்குவைத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்,அனேகமாக குற்றப்பின்னணி உள்ளவர்களையே இலக்குவைப்பார்கள் என அதிகாரியொருவர் ஏபிக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை
அதன் மூலம் தேர்தல்காலத்தில் வாக்குறுதியளித்தபடி குடியேற்றவாசிகளை பெருமளவில் நாடு கடத்துவதில் டிரம்ப் ஈடுபடுவார் என்பதை உறுதி செய்துள்ளார். அதேவேளை குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை சிக்காக்கோவிலேயே ஆரம்பமாகும்,என தெரிவித்த அதிகாரியொருவர் தனது பெயர் விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.
இந்த வாரம் முழுவதும் கைதுகள் இடம்பெறலாம். இதேவேளை குடியேற்றவாசிகளை இலக்குவைக்கும் நடவடிக்கை சிக்காக்கோவிலேயே ஆரம்பமாகும் என வோல்ஸ்ரீட் ஜேர்னலும் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை நாளை செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகும் இந்த நடவடிக்கை வாரம் முழுவதும் தொடரும்,100 முதல் 200 அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்கா முழுவதும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்கம் அமுலாக்கல் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதோடு நியுயோர்க்கில் கைதுகள் இடம்பெறுவதையும் மியாமியில் கைதுகள் இடம்பெறுவதையும் நீங்கள் பார்க்கப்போகின்றீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிக்காக்கோ இலினொய்சிலிருந்தே குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை ஆரம்பிக்கும் என எல்லைகளிற்கான டிரம்பின் அதிகாரியாக பணியாற்றவுள்ள டொம் ஹொமன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.