கல்கரியில் தீ வைப்புச் சம்பவத்தின் மூலம் 10 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுத்திய மூவர் கைது
கனடாவின் கல்கரி நகரில் உள்ள சொகுசு கார் விற்பனையகம் ஒன்றிற்குத் தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 16 ஆம் திகதி அதிகாலை 4:45 மணியளவில் 1A ஸ்ட்ரீட் S.W. பகுதியில் அமைந்துள்ள குறித்த சொகுசு கார் விற்பனையகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

தீ பரவிய சமயத்தில் அந்தப் கட்டடத்திற்குள் 25 அதிநவீன சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தீவைப்புச் சம்பவத்தினால் அங்கிருந்த சொகுசு வாகனங்கள் மற்றும் கட்டடம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், ஒட்டுமொத்த இழப்பு சுமார் 10 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், திட்டமிட்டே இந்தத் தீ வைக்கப்பட்டதை உறுதி செய்து கல்கரியைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 45 வயதுடைய கைஸ் கசூவா (Kais Kassoua), 34 வயதுடைய லோகன் டிரேக் (Logan Drake) மற்றும் 31 வயதுடைய சேஸ் க்ராஸ் (Chayce Krause) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் லோகன் டிரேக் மற்றும் சேஸ் க்ராஸ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைஸ் கசூவா ஜூலை 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இந்தச் சம்பவத்தில் "கார் விற்பனையகத்தின் உரிமையாளருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 403-266-1234 என்ற எண்ணிற்கு காவல்துறையையோ அல்லது 1-800-222-8477 என்ற எண்ணில் குற்றத்தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.