முன்னாள் சபாநாயகர் மது அருந்தியிருக்கவில்லை.. பரிசோதனையில் உறுதி
முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல, அண்மையில் விபத்துக்குள்ளான போது மது அருந்தியிருக்கவில்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 11-ஆம் திகதி இரவு, சப்புகஸ்கந்த பகுதியில் அசோக ரன்வல பயணித்த வாகனம் மற்றுமொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர். விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மதுபோதையில் இருந்ததாக சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
இது தொடர்பாக அசோக ரன்வலவிடம் இருந்து பெறப்பட்ட இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு (Government Analyst’s Department) அனுப்பப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், பரிசோதனை அறிக்கையின்படி அவரது மாதிரிகளில் மதுபானத்தின் எந்தவொரு தடயமும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்தார்.
விபத்து நடந்த உடனேயே அவருக்கு ஊதிப் பார்க்கும் பரிசோதனை (Breathalyzer test) நடத்தப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே காவல்துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து வாகனத்தின் பிரேக் செயலிழப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.