89 வயதில் சாதனை படைத்த விமானி
விமானியொருவர் தனது 89ம் வயதில் புதிய உலக சாதனையொன்றை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
போலியோ ஒழிப்பு நிதி திரட்டும் நோக்கில் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது, 89 வயதான விமானி எட் கால்கின் புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஒரே எஞ்சின் கொண்ட சிறிய விமானத்தில் அட்லாண்டிக் கடலைக் கடந்து பறந்த மூத்த விமானி என்ற சாதனையை அவர் படைத்ததாக கருதப்படுகிறது.
கால்கின் மற்றும் அவரது துணை விமானி பீட்டர் டீஹன், புதன்கிழமை போர்ச்சுகலின் அசோரஸ் பகுதியில் இருந்து கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் வரை பறந்து சென்றுள்ளனர்.
“எனக்கு பறப்பதில் பெரும் ஆர்வம் உள்ளது. வானத்தில் இருப்பது அற்புதம். பெரிய கடல் ஒன்றைத் தாண்டும் போது, நம்மிடம் இருக்கிறது என்று நினைக்கும் பிரச்சினைகள் சிறியதாகவே தோன்றுகின்றன,” என்று கால்கின் கூறியுள்ளார்.
இச்சாதனையை கின்னஸ் உலகச் சாதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த இன்னும் சில வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 37 நாட்கள் நீண்ட விமானப் பயணம், சர்வதேச ரொட்டரி Rotary International அமைப்பின் போலியோ தடுப்பூசி திட்டத்திற்காக பத்தாயிரக்கணக்கான டொலர்கள் திரட்டியுள்ளது.