இஸ்ரேல் இராணுவ இலக்குகள் மீது ஈரான் கடும் தாக்குதல்
ஈரானிய தேசிய பாதுகாப்பு பேரவைத் தலைவர் அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் உதவியாளர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் "இதயப் பகுதி" மீது 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு மையங்களை இலக்கு வைத்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
குறிப்பாக, இஸ்ரேலின் "மிகவும் மேம்பட்ட மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளை" ஊடுருவி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல் படை உரிமை கோரியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கொர்ரம்ஷார்-4 மற்றும் காதிர் ஆகிய வகை பலமுனை வெடி தலைகளைக் கொண்ட (Multiple-warhead) ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியுள்ளது.
இவை வான் பாதுகாப்பு அமைப்புகளைத் திசைதிருப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, டெல் அவிவ் நகரின் புறநகர்ப் பகுதியான ராமத் கானில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
கஃபர் காசிம் நகரில் நான்கு இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், டெல் அவிவ் சவிடோர் தொடருந்து நிலையமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பெனி பிராக் பகுதியில் ஏவுகணை சிதறல்கள் தாக்கியதில் ஒரு இளைஞர் காயமடைந்துள்ளார்.