நைஜீரியாவில் விமான நிலையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் நடத்திய அட்டுழியம்
நைஜீரியாவில் விமான நிலையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் என்கிற பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க ராணுவம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் வடமேற்கு பகுதிகளில் ஆயுதமேந்திய பல்வேறு கொள்ளை கும்பல்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றன.
பள்ளிகளுக்குள் புகுந்து மாணவ, மாணவிகளை கடத்திவைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பது, கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று கால்நடைகளை திருடி செல்வது போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் வடமேற்கு மாகாணம் கதுனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் நேற்று முன்தினம் மதியம் கொள்ளை கும்பலை சேர்ந்த 200 பேர் அதிரடியாக நுழைந்தனர்.
துப்பாக்கிகளுடன் விமான நிலையத்தின் ஓடுபாதையை ஆக்கிரமித்த அவர்கள் 2 விமானங்கள் புறப்படுவதை தடுத்தனர். இதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு வந்தபோது, அவர்களை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியனார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்தும் விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் கொள்ளையர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ராணுவ வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். கொள்ளையர்கள் திருடி வைத்திருந்த கால்நடைகளை ராணுவ வீரர்கள் கைப்பற்றிய ஆத்திரத்தில் கொள்ளையர்கள் விமான நிலையத்தை ஆக்கிரமித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.