இங்கிலாந்தின் நடனப்பள்ளியில் கத்தி குத்து தாக்குதல் ; 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு
இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் உள்ள நடனப் பள்ளி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதலில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கத்திகுத்து தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நடனப்பள்ளியில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களை 17 வயது சிறுவன் திடீரென கத்தியால் தாக்கினான். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற 9 பேர் கத்தியால் குத்தி பலத்த காயம் அடைந்தனர்.
சில சிறுவர்கள் ரத்தக் காயங்களுடன் நடனப் பள்ளியை விட்டு சாலையில் ஓடினர். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும்பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்கிய வாலிபரை கைது செய்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட சிறுவன் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்த சம்பவத்தை "பயங்கரமான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சி" என்று விவரித்தார்.
இது குறித்து பேசிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ், “குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து நானும், எனது மனைவியும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம், மிகவும் துயரமான முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம், பிரார்த்தனை செய்கிறோம்.
இந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்." இதனிடையே இந்த சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.