ஹோர்முஸ் நீரிணையில் பிரெஞ்சு கப்பல் மீது தாக்குதல்; எட்டுபேர் காயம்
ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்துகொண்டிருந்த பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CMA CGM-க்கு சொந்தமான “San Antonio” சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை மே மாதம் 5ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மால்டா கொடியின் கீழ் இயங்கிய இந்தக் கப்பலில் இடம்பெற்ற தாக்குதலில் எட்டு மாலுமிகள் காயமடைந்ததாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் எந்த வகையிலும் குறிவைக்கப்படவில்லை
காயமடைந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், கப்பலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவெளை இந்த சம்பவத்தின் போது எந்தப் பிரெஞ்சு குடிமகனும் கப்பலில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
“பிரான்ஸ் எந்த வகையிலும் குறிவைக்கப்படவில்லை” என பிரெஞ்சு அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை, மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாக்குதல், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அமேரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்த “Project Liberty” நடவடிக்கைக்கு அடுத்த நாளே இடம்பெற்றுள்ளது.
எனினும், ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டும் முயற்சியின் காரணமாக அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.