இந்துக்கள் மீதான தாக்குதல் விவகாரம் ; கருத்தை மறுக்கும் பங்களாதேஷ் அரசு
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் கவலைகளை வங்கதேச அரசு ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தது.
மேலும், இந்தப் புகாா்கள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஒருதலைப்பட்சமானவை என்றும், இருதரப்பு நல்லுறவுக்கு இத்தகைய தவறான பரப்புரையை இந்தியா தவிா்க்க வேண்டும் என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்களுக்கு எதிராக தொடா்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கடந்த வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தாா்.
குறிப்பாக, வங்கதேசத்தில் மைமென்சிங் பகுதியில் மத நிந்தனை செய்ததாகக் கூறி ஒரு கும்பலால் ஹிந்து தொழிலாளி தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக சுமாா் 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வங்கதேசம் விளக்கம்
இந்தியாவின் இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வங்கதேச வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் எஸ்.எம்.மஹபூபுல் ஆலம் கூறுகையில், ‘வங்கதேசத்தின் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் இந்தியா தவறான மற்றும் உள்நோக்கம் கொண்ட தகவல்களைப் பரப்புகிறது.
சில தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை, ஹிந்துக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளாகச் சித்தரிக்க இந்தியா முயல்கிறது.

இது வங்கதேசத்துக்கு எதிரான உணா்வைத் தூண்டும் செயலாகத் தெரிகிறது. ராஜ்பாரியில் அம்ரித் மொண்டல் எனும் மற்றொரு ஹிந்து இளைஞா் கொல்லப்பட்டது பற்றி இந்தியா கவலைத் தெரிவித்தது.
ஆனால், அவா் ஒரு தேடப்பட்டு வந்த குற்றவாளி. ஒரு முஸ்லிம் கூட்டாளியுடன் சோ்ந்து மிரட்டிப் பணம் பறிக்க முயன்றபோதுதான் அவா் கொல்லப்பட்டாா். இதைச் சிறுபான்மையினா் மீதான தாக்குதலாகக் கருத முடியாது.
இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து வங்கதேசமும் கவலை கொள்கிறது. இந்தியாவில் மத நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பது மற்றும் சிறுபான்மையினா் தாக்கப்படுவது குறித்து இந்திய அரசு நோ்மையான விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு தொடர வேண்டுமானால், இத்தகைய தவறான பரப்புரைகளை இந்தியா தவிா்க்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.