அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் ; பலர் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் படுகொலை
இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் திகதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளதுடன், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் , தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.