பிரான்ஸில் விண்வெளி மற்றும் இராணுவத் தகவல்களைத் திருட முயற்சி ; சிக்கிய ஆசிய நாட்டவர்கள்
பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிராமப்புற வீடு ஒன்றிலிருந்து தகவல்களைத் திரட்டியதாகக் சந்தேகிக்கப்படும் சீன உளவாளிகள் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர்டாக்ஸ் நகருக்கு அருகில் உள்ள காம்ப்ளேன்ஸ்-எட்-மேனாக் என்ற அமைதியான கிராமத்தில், 'Airbnb' மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டின் தோட்டத்தில் சீனர்கள் இருவர் பாரிய செயற்கைக்கோள் அண்டெனாவைப் பொருத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அதேநேரம் தங்களது இணையச் சேவைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டதைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை பிரான்ஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பொது இயக்குநரகத்தின் அதிகாரிகள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன்போது அங்கிருந்த பெருமளவிலான கணினி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 27 மற்றும் 29 வயதுடைய இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பரிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, "பிரான்ஸின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு சக்தியொன்றுக்குத் தகவல்களை வழங்கியமை" ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த மாதம் 'பொறியியலாளர்கள்' என்ற போர்வையில் தொழில் வீசாவைப் பெற்று பிரான்சுக்குள் நுழைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் வலையமைப்பின் தரவுகள் மற்றும் பிரான்ஸின் முக்கிய இராணுவத் தளங்களின் தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சீனாவுக்கு அனுப்ப இவர்கள் முயற்சித்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் ஏர்பஸ் (Airbus), தேல்ஸ் (Thales) போன்ற முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், இந்தப் பகுதி நீண்டகாலமாகவே வெளிநாட்டு உளவாளிகளின் இலக்காக இருந்து வருவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.