நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்ற அவுஸ்திரேலியா!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்களால் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியுள்ளது.
தர்மசாலாவில் இன்றைய தினம் (28-10-2023) இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களைப் பெற்றது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 109 ஓட்டங்களையும், டேவிட் வார்னர் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் க்ளென் பிலிப்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து, 389 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 116 ஓட்டங்களையும் ஜேம்ஸ் நீஷம் 58 ஓட்டங்களையும் மற்றும் டேரில் மிட்செல் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுக்களையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.