முக்கிய நாடொன்றில் எரிபொருள் விலை உயர்வு; இலங்கை நிலை ஏற்படுமா!
பங்களாதேஷில் எரிபொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து மக்கள் அதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். பங்களாதேஷில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 28 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் தனி நாடாக உருவாகி இத்தனை ஆண்டுகளில், எரிபொருள் விலை 52 சதவீதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வு, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலை உயர்வு அறிவிக்கப்பட்ட 5ம் திகதியன்று, நுாற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்தனர். இதனால், பதற்றமான சூழல் நிலவியது.பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பல்வேறு அமைப்பினரும் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள், கண்டன பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விலை ஏற்றம் குறித்து, வங்கதேசத்தின் மின்சாரம் மற்றும் எரிபொருள் துறை அமைச்சர் நஸ்ருல் ஹமீத் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களில், 'பங்களாதேஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' நிறுவனத்துக்கு, 800 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த கடுமையான விலை ஏற்றத்தை மக்களால் தாங்க முடியாது என்பது தெரியும். ஆனால், இதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. மக்கள் சற்று அமைதி காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையிலும் இவ்வாறு எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றமே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக ஏதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.