கன்சர்வேடிவ் கட்சியில் தொடரும் நெருக்கடி: மேலும் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சைகளாகச் செயல்படத் தீர்மானித்துள்ளனர்.
அதேவேளையில், கட்சித் தலைவர் கெர்ரி-லின் ஃபைண்ட்லேயின் தலைமை அதிகாரி கிறிஸ் டெலானியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பவுண்டரி-சிமில்கமீன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வில்சன் புதன்கிழமை காலை தனது விலகலை அறிவித்தார்.

ஃபைண்ட்லே தலைவரானபோது திறந்த மனதுடன் அவருக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுக்க முடிவெடுத்தேன். 3 மாதங்களுக்குப் பிறகு எனக்குப் பதில் கிடைத்துவிட்டது. நிலைமை இவ்வளவு விரைவாக இவ்வளவு மோசமடையும் என்று நான் நினைக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொலம்பியா ரிவர்–ரெவெல்ஸ்டோக் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மெக்கின்னிஸ் பிற்பகலில் விலகினார்.
"தற்போதைய தலைமையின் கீழ் பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்குச் சேவையாற்றும் எனது இலக்கை அடைய முடியாது என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் ஃபைண்ட்லே தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் கட்சியிலிருந்து விலகும் 8-வது மற்றும் 9-வது சட்ட மன்ற உறுப்பினர்கள் இவர்களாவர்.
விலகிய உறுப்பினர்கள் அனைவரும் சுயேச்சைகளாகச் செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
தலைவர் ஃபைண்ட்லே, தனது தலைமை அதிகாரி கிறிஸ் டெலானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
அவருக்குப் பதிலாக, ஃபைண்ட்லே இடைத்தேர்தலில் போட்டியிட வழிவிடும் வகையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரியான் காஸ்பர் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.