பிரட்டிஷ் கொலம்பிய சட்ட மன்றில் தொடரும் பதவி விலகல்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கன்சர்வேடிவ் கட்சியின் சட்டமன்றக் குழுவில் இருந்து மற்றொரு முக்கிய உறுப்பினரான லிண்டா ஹெப்னர் ஞாயிற்றுக்கிழமை பதவி விலகியுள்ளார்.
சர்ரே-செர்பென்டைன் ரிவர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஹெப்னர், கட்சியின் தலைவர் கெர்ரி-லின் ஃபைண்ட்லேவுக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதத்தின் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
முன்னாள் தலைவர் ஜான் ரஸ்டாட் உட்பட மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதே தனது இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என ஹெப்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டு நடப்பதற்குப் பதிலாக, அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது அறிவார்ந்த செயலல்ல. ஒரே ஒரு உறுப்பினருடன் இருந்த இந்தக் கட்சியை இந்த அளவிற்கு வளர்த்தெடுத்தவர் ஜான் ரஸ்டாட்" என்று ஃபைண்ட்லேவுக்கு அனுப்பிய செய்தியில் ஹெப்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வார இறுதியில் ஜான் ரஸ்டாட், சர்ரே-வைட் ராக் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் இடைக்காலத் தலைவருமான ட்ரெவர் ஹால்ஃபோர்ட் மற்றும் ஸ்கீனா தொகுதி எம்.எல்.ஏ கிளலேர் ராட்டே ஆகிய மூவரும் கன்சர்வேடிவ் கட்சியின் சட்டமன்றக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர்.
தனது ராஜினாமா அறிக்கையில் கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்துள்ள ஹெப்னர், தன்னைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி, அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளையும் மாற்றுப் பார்வைகளையும் கேட்க ஃபைண்ட்லே மறுப்பதாகவும், இதனால் அவரது தலைமை மீது தான் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஃபைண்ட்லேவை விமர்சிப்பவர்களை உளவு பார்க்கத் தனிப்பட்ட புலனாய்வாளர் நியமிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட உள்கட்சி பூசல்கள், மக்கள் பிரதிநிதியாகத் தன் கடமையைச் செய்வதிலிருந்து கவனத்தைத் திருப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய இந்த குழப்பங்களைச் சகித்துக் கொள்ளும் எனது பொறுமை முடிவுக்கு வந்துவிட்டது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.