பெனின் தீ விபத்தில் குழந்தைகள் இருவர் உட்பட 35 பேர் பலி
நைஜீரியாவின் அண்டை தேசமான பெனினில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில் 35 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெனின் நாட்டில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு அங்கே விலையும் அதிகம்.
பெற்றோல் பக்கட்டுக்களை பிரிக்கும்போது தீ
எனவே பெற்றோல் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கும் எல்லை தேசமான நைஜீரியாவிலிருந்து சட்ட விரோதமாக பெனினுக்குள் கடத்தப்பட்டு வருகிறது.
நைஜீரியாவில் பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பெற்றோல் பெனின் எல்லைக்குள் கடத்தி வரப்பட்டதும், பக்கட்டுக்கள் பிரிக்கப்பட்டு கொள்கலன்களின் சேகரிக்கப்பட்டு கள்ளச்சந்தை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில் பெனின் எல்லையில் அமைந்திருக்கும் செமி-பாட்ஜி நகரில் அப்படியான பெற்றோல் பக்கட்டுக்களை பிரிக்கும்போது தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது.
பெற்றோலில் பற்றிய நெருப்பு, மளமளவென அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களையும் பற்றியதில் பெரும் சோகம் விளைந்தது. இந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் எதிர்பாரா தீ விபத்தில் சிக்கினர்.
இந்த தீயில் கருகி 2 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியானார்கள்.
சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்குப் போராடி வரும் இவர்கள் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.