மொன்ரியல் நகர மையத்தில் வெடிக்கப்போகும் போராட்டம்
மொன்ரியல் நகரில் உள்ள பெல் மையம் (Bell Centre) முன்பாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்றுகூடவுள்ளதாக கூறப்படுகின்றது. மதியம் 2 மணிக்கு மொன்ரியல் நகர மையத்தில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடவுள்ளதாக கூறப்படுகின்றது.
மாகாணத்தில் உள்ள மருத்துவர்களின் ஊதிய முறையில் மாற்றம் ஏற்படுத்தும் புதிய சட்டத்தை இடைநிறுத்துமாறு கோரி அவர்கள், போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

நான்கு மருத்துவ சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு
நான்கு மருத்துவ சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம், கடந்த மாதம் மாகாண சபையில் முதல்வர் பிரான்சுவா லெகோ வலுக்கட்டாயமாக நிறைவேற்றிய சட்டமூலத்தை எதிர்ப்பதாக அமைகிறது.
அந்த சட்டமூலம், மருத்துவர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை “செயல்திறன் இலக்குகள்” என்பதுடன் இணைக்கிறது. ந்த மாற்றங்களை புறக்கணிக்கவோ அல்லது எதிர்ப்புக் காட்டவோ முயற்சிக்கும் மருத்துவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரிக்கிறது.
மருத்துவர்கள், இந்த புதிய சட்டம் தங்களது குரலை அடக்குவதாகவும், அதன் விளைவாக குவெபெக் மாகாணத்திலிருந்து பல மருத்துவர்கள் வெளியேற நேரிடும் அபாயம் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, பல மருத்துவ அமைப்புகள் அந்தச் சட்டத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த தீர்மானித்துள்ளன.